Piracy Software ஏன்? எதற்கு? எப்படி?

'எதுக்கு சார் பத்தாயிரம் 20 ஆயிரம்னு காச கரியாக்குறீங்க...என்ன வேணும்னு சொல்லுங்க, அதையே 100 ரூபாய்க்கு தர்றோம். ஒரிஜனல விட சூப்பரா இருக்கும். 2 க்கு மேல வாங்குனீங்கன்னா எக்ஸ்ட்ரா ஓண்ணு ஃப்ரீயா தர்றோம்...ரேட் பாத்து பண்ணிக்கலாம் சார்' இது வெளிநாட்டு பொருட்களின் போலிகளை வாங்க முற்படுவோரிடம் விற்பனையாளர் பேசும் டயலாக் இல்லை... சில ஆயிரங்கள் முதல் பல்லாயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சாஃப்ட்வேர்களின் பைரஸி எனப்படும் போலிகளை விற்பனை செய்யும் விற்பனையாளரின் வியாபாரப் பேச்சு. 

வீட்டுக்குள் அல்லது சிறிய அளவில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆபரேடிங் சிஸ்டம்களில் 90 சதவீதம் போலியானவை. மிகுந்த சிரத்தையுடன் பல மாதங்கள் ஆய்வுசெய்து வடிவமைக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டம்கள் மற்றும் சாஃப்ட்வேர்களைக் காட்டிலும், அவற்றின் பைரஸிகளுக்கு மவுசு அதிகமாக இருப்பது ஏன்? அசல் மென்பொருள்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றின் போலிகளின் விற்பனை அதிகரிக்கக் காரணம் என்ன? இதற்கான காரணத்தை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பார்வையில் அலசாமல், சாதாரண பயனாளர் ஒருவரின் பார்வையிலிருந்து பார்த்தால், பைரஸிகளுக்கான சரியான காரணம் புரிந்து விடும்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மட்டுமல்ல...ஆடி மாதத்தில் கூட தள்ளுபடி என்ற பெயரில் டி.வி, உள்பட அனைத்து எலெக்ட்ராணிக்ஸ் மட்டுமின்றி குண்டூசிகளின் விற்பனையும் களைகட்டும். தங்களது தயாரிப்புகளை இந்தந்த இடங்களில், இந்தந்த விலைகளில் வாங்கலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கண்காட்சிகள் மூலமும், பெரிய கடைகளில் காட்சிப்பொருளாக்கியும் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் , டி.வி, பெட்டிக்கு சமமாக அனைத்து வீடுகளையும், அலுவலகங்களையும் அலங் கரித்துவரும் கம்ப்யூட்டர்களுக்கு முதுகெலும் பாக செயல்படும் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கிய சாஃப்ட்வேர் தொகுப்புகள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் அவற்றின் விலை என்னவென்று சாதாரண பயனாளருக்கு துல்லியமாக, விரிவாக கூற எவரும் முன்வருவதில்லை. பைரஸி சாஃப்ட்வேர்கள் வைத்திருப்பது தண்டனைக்குரியது என கூறிக்கொள்ளும் மைக்ரோசாஃப்ட் உள்பட பெரிய நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றி இதுவது பொதுமக்களுக்கு புரியவைத்து (மற்ற எலெக்ட்ராணிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செய்வது போல) அசல் மென்பொருள்கள் பற்றிய தெளிவை இதுவரை ஏற்படுத்த, ஏனோ தயக்கம் காட்டுகின்றன. அட்டகாச தள்ளுபடிகள், அதிரடி சலுகைகள் என கவர்ச்சி விளம்பரங்கள் அளிக்காமல், 'இந்த தயாரிப்புக்கான விலை இது...இதை வாங்கினால் இதுபோன்ற பயன்களைப் பெறலாம்' என விளம்பரங்களை (அவுட்லுக், வீக் போன்ற மேல்தட்டு பத்திரிகைகளில் அல்ல) பொதுமக்களுக்கு புரியும் படி பத்திரிகைகளில் விரிவாக அளிக்கலாம். ஆனால் அதைச் செய்ய நிறுவனங்களால் முடிவதில்லை. அசல் மென்பொருள்களை அலைந்து திரியாமல் எங்கு வாங்குவது, அவற்றின் விலைப்பட்டியல் மற்றும் என் னென்ன பயன்கள் என்பதை விளக்க யாரும் இல்லாததால் பயனாளர்கள் வேறு பாதை தெரி யாமல் பைரஸியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

அசல் மென்பொருள் மற்றும் ஆபரேடிங்சிஸ்டம் தான் பயன்படுத்துவேன் என அடம்பிடிக்கும் பயனாளர்களிடம் கம்ப்யூட்டர் டீலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறும் அறிவுரை தான் இக்கட்டுரையின் முதல் பாராவில் நீங்கள் படித்தது... அடுத்து, அதன் விலை.... அசெம்பிள் செய்யப்படும் கம்ப்யூட்டரின் விலைக்கும், நிறுவன தயாரிப்பு கம்ப்யூட்டர்களுக்கும் அதிக விலை வித்தியாசமில்லை. தற்போதுள்ள சூழலில் தரமான கம்ப்யூட்டர்கள் கூட 30 ஆயிரத்து சொச்சத்தில் கிடைத்து விடுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று அல்லது இரண்டு அசல் சாஃப்ட்வேர்களை உள்ளிட வேண்டுமெனில், கம்ப்யூட்டர்களின் மொத்த விலைக்கு இணையாக பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டமின் விலை சற்று குறைவாக இருந்தாலும், மற்ற சாஃப்ட்வேர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் பக்கம் செல்வதற்கு, சிறிய நிறுவனங்கள் மற்றும் சாதாரண பயனாளர்கள் அச்சம் கொள்கின்றனர். இதை சாதகமாக்கிக்கொண்டு, அசெம்பிள் கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர்கள் சர்வ சாதார ணமாக பைரஸி சாஃப்ட்வேர்களை தயாரித்து சகட்டுமேனிக்கு விற்றுத் தள்ளுகின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், தடுக்க வழிகள் தெரிந்திருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் நிறுவனங்கள் பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கை. 

வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒரு சிலர் பைரஸி சாஃப்ட்வேர் வாங்குவதால், தங்கள் தயாரிப்புக்கு எந்த பாதிப்பு வராது என்றும், அசல் மென்பொருள்கள் வாங்குவதில் உறுதியாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிப் பயனாளர்கள் இருக்கும் வரை தங்களுக்கு கவலையில்லை என்றும், நிறுவனங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன.பைரஸி பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பயனாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் கூட, அசல் மென்பொருள்களின் உரிம சிக்கல்கள் மற்றும் துரிதமற்ற சேவை ஆகியவற்றால் வெறுத்துப் போய் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முழு சுதந்திரம் அளிக்கும் ஓப்பன் சோர்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்த முனைகின்றனர். இனியும் , கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விற்பனையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால்... அசல் மென்பொருள்கள் என்பது வெறும் மாஸ்டர் காப்பியாக மாறி, பைரஸி சாஃப்ட்வேர்கள் தான் அசலானவை என்ற நிலை உருவாகிவிடும்!

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Premium Blogger Templates | Best View (1024x768) on Mozilla Firefox and IE 7.0