Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

இறந்த பிறகும் (???) இமெயில் அனுப்பலாம் - அட இது சத்தியமுங்கோ

என்ன இது? இறந்த பிறகு யார் அனுப்புவார்கள்? முதலில் எப்படி கடிதம் எழுத முடியும்? யாருடைய இமெயில் அக்கவுண்ட்? என்ற சந்தேகமும், சிரிப்பும், ஒரு வேளை முடியுமோ என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் எழுகிறதா? ஆம் முடியும். இணையத்தில் எதுவும் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. நீங்கள் இறந்த பிறகு நீங்கள் முன்பே தயார் செய்து வைத்த இமெயில் கடிதங்கள் உடனே துப்பாக்கி முனையில் இருந்து கிளம்பும் தோட்டாக்கள் போல நீங்கள் யாருக்கு எழுதினீர்களோ அவர்களுக்குச் செல்லும். இந்த தளத்தினை http://www.farawayfish.com என்ற முகவரியில் காணலாம். முதலில் இதற்கான கட்டாயம் அல்லது சூழ்நிலை என்ன என்று பார்ப்போம்.

நாம் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். அதுவும் எதிர்பாராத தருணத்தில். பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பல விஷயங்களை நம் மனதில் வைத்திருப்போம். பேங்க் அக்கவுண்ட், லாக்கரில் இருக்கும் பணம், டாகுமெண்ட் மற்றும் நகை, பணம் கொடுத்து இன்னும் பதியாமல் இருக்கும் நிலம் மற்றும் வீடு, யாரை எல்லாம் நம்பக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுரை, யாரை அவர்கள் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற இவை எல்லாம் உயிருடன் இருக்கையில் கொட்டித் தீர்த்துவிட முடியாது. ஆனால் திடீரென மரணம் சம்பவித்தால் என்ன செய்திட முடியும்? உயில் எழுதினால் தெரிந்துவிடாதா? யாரையாவது நம்பி எழுதி வைத்து இறந்தால் அவர் நம்பிக்கை மோசம் செய்துவிடமாட்டாரா? இந்த பதட்டத்திற்குத்தான் நமக்கு உதவிட வந்துள்ளது மேலே சொன்ன முகவரியில் உள்ள தளம். இந்த தளத்திற்குச் சென்றால் நம்மைக் கவரும் ஓர் இடம் – நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள், மாதங்கள் உயிர் வாழ்வீர்கள் என்று ஒரு கணக்குப் போட்டு சொல்லும் இடம் தான். உங்கள் பெயர், வயது, ஆண் மற்றும் பெண் போன்ற விபரங்களைக் கேட்ட பின் நீங்கள் புகை பிடிக்கிறீர்களா? மது குடிக்கிறீர்களா? உங்கள் எடை மற்றும் உயரம் என்ன என்று கேட்டு இத்தனை ஆண்டுகள் நீங்கள் உயிர் வாழலாம் என்று ஹேஷ்யமாக ஒரு கணக்கிட்டுச் சொல்கிறது. ஆண்டுக் கணக்கை அடுத்து அதனை எத்தனை நொடிகள் என்றும் ஒரு கடிகாரக் கணக்கு மாதிரி காட்டுகிறது. இதில் நம் மரணத்திற்கு விதித்த காலம் நொடிகளில் குறைவதைக் காண மனதிற்குப் பக் என்கிறது.
சரி, முக்கிய விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் பதிந்து கொண்டால் உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அதனைக் கிளிக் செய்தால் இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது. இதில் உங்களின் எண்ணங்களைப் பதிந்து வைக்கலாம். உங்கள் கொள்கைகளை எழுதி வைக்கலாம். அவை நீங்கள் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு அறிவிக்கும் வகையில் ஓர் இணைய தளமாகக் கிடைக்கும். பத்து ஆண்டுகளுக்கு இவை இணைய வெளியில் இருக்கும்.

அடுத்ததாக நீங்கள் யாருக்கெல்லாம் உங்கள் செய்தியை, எண்ணங்களை, அறிவுரையை, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அறிவுறுத்த வேண்டுமோ அவர்களின் இமெயிலுக்கு அதனை செய்தியாக கடிதம் எழுதி வைக்கலாம். இவை உங்களுக்கென ஒதுக்கப்பட்ட தளத்தில் பாதுகாக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மட்டும் இதனை எடிட் செய்து மாற்றலாம்; புதிய செய்திகளை தகவல்களை இணைக்கலாம். இத்தனை மெயில்களை இதுவரை நீங்கள் சேமித்து வைத்துள்ளீர்கள் என்று விவரங்கள் உங்களுக்குக் காட்டப்படும்.

சரி, இந்த செய்திகள் நீங்கள் இறந்த பின்னர் எப்படி மற்றவர்களுக்கு அனுப்பப்படும்? முதலில் செய்திகளை அமைக்க எப்படி இடம் ஒதுக்கப்படும். இந்த தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றைப் பதிந்தால் நீங்கள் தரும் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதனைக் கிளிக் செய்தால் அந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படும். இங்கு தான் நீங்கள் எழுதும் எண்ணங்களும் தகவல்களும் மற்றும் அமைத்திடும் இமெயில் செய்திகளும் பாதுகாக்கப்படும். பாடல்களைப் பதிந்து வைக்கலாம்; வீடியோ காட்சிகளையும் இதில் பதியலாம்.
அடுத்ததாக யார் இந்த இமெயில் செய்திகளை அனுப்புவார்கள். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையான மூன்று பேர் குறித்த தகவல்களையும் இமெயில் முகவரிகளையும் அனுப்ப வேண்டும். இவர்களை இன்பார்மர்கள் என இந்த தளம் அழைக்கிறது. இவர்கள் தான் நீங்கள் இறந்தவுடன் இந்த தளத்திற்கு செய்தி அனுப்புபவர்கள். இவர்களுக்கு இந்த தளத்தை நிர்வகிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் பாஸ்வேர்ட் ஒன்றையும் பாதுகாப்பான லிங்க் ஒன்றையும் அனுப்பி வைப்பார்கள். உங்களின் உயிர் நண்பர்களாக, உறவினர்களாக இவர்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் நீங்கள் இறந்தவுடன் இவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதுதான். உடனே இந்த தளம் மூன்று பேருக்கும் தகவல் அனுப்பி நீங்கள் இறந்ததை உறுதி செய்யும். ஏன், உங்கள் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும். 12 வகையான சோதனை 18 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நீங்கள் எழுதி வைத்த தகவல்கள் அடங்கிய தளம் உலகிற்கு காட்டப்படும். நீங்கள் எழுதி வைத்த இமெயில்கள் (இலவச சேவையில் 25 பேருக்கு அனுப்பலாம்) சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். இத்தனை நிலைகள் இருந்தாலும் அனைத்துமே நாம் மேற்கொள்ளும் வகையில் எளிமையானதாக உள்ளன. இறந்த பிறகு இறவாப் புகழ் பெற இந்த தளத்தை அணுகலாம். உங்களின் இறுதி செய்திகள் உற்றவர்களுக்கு உங்களுக்குப் பின் சென்று சேர இதனைப் பயன்படுத்தலாம். இலவசமாக இதனைப் பயன்படுத்த எண்ணினால் ஓர் ஆண்டுக்கு மட்டுமே முடியும். அதாவது பதிந்து ஓர் ஆண்டில் நீங்கள் இறந்துவிட்டால் இலவசமாக செயல்படுத்தப்படும். அதற்கும் மேலான காலத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் சிறப்புகளைப் பார்ப்போம்: நீங்கள் அமைத்திடும் செய்திகள் மற்றும் இமெயில்களை உங்களைத் தவிர யாரும், இன்பார்மர்கள் உட்பட, பார்க்கவோ படிக்கவோ எடிட் செய்திட முடியாது. இறப்பதற்கு முன் தானாக இவை அனுப்பப்பட்டுவிடுமா? நிச்சயம் 100% இல்லை. பல வகையான சோதனை மேற்கொண்ட பின்னர், இறந்தது உறுதி செய்யப்பட்ட பின்னரே செய்திகள் அனுப்பப்படும். உங்கள் இன்பார்மார்கள் மூன்று பேரும் இணைந்து தவறு செய்தால் தான் பிரச்சினை ஏற்படும். அப்போதும் இந்த தளம் சில ரகசிய சோதனைகளை மேற்கொள்ளும். இன்பார்மர்களை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து தளத்திற்கு அறிவியுங்கள். இவர்களை மாற்ற வேண்டும் என இடையே எண்ணினால் மாற்றலாம். தள நிர்வாகிகள் இவர்களுடன் பேசி இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறுவார்கள்.
இலவச சேவை எனில் உங்கள் தளம் மரணத்திற்குப் பின் ஓராண்டும் கட்டண சேவை எனில் 9 ஆண்டுகளும் இருக்கும். உங்கள் நண்பர்கள் யாரேனும் தொடர்ந்து பணம் செலுத்தினால் இணையத்தில் தொடர்ந்து உங்கள் தளம் இடம் பெறும். நீங்கள் சேவ் செய்து வைத்த பைல்களின் பார்மட்டுகள் காலப்போக்கில் மாறுதல் அடைந்தால் தளம் அவற்றை அப்டேட் செய்திடும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கு ஒப்புதல் பற்றுச் சீட்டினை இந்த தளம் வழங்கிடும். எனவே பணத்திற்குப் பாதகமில்லை.

இன்பார்மர்களிடம் நான்கு முறை இமெயில் மூலம் பல வழிகளில் கேட்கப் பட்ட பின்னரே உங்கள் கடிதங்களை அனுப்ப அனுமதி வழங்கப்படும். உங்கள் இமெயிலுக்கும் பல முறை இமெயில் அனுப்பப்பட்டு மரணம் உறுதி செய்யப் படும். சற்று கூடுதலாக கட்டணம் செலுத் தினால் எஸ்.எம்.எஸ். மூலமும் மரணம் உறுதி செய்யப்படும். உங்களுடைய பாஸ்வேர்ட் மற்றும் பின் எண் மறந்து போனால் தளத்திற்கு தகவல் தெரிவித்தால் அவை அறிவிக்கப்படும்.

வலைப்பூவிற்கு இலவச காப்புரிமை

முன்னதாகவே இது பற்றி ஒரு பதிவை பிரசுரித்திருந்தேன். இங்கே சென்று அதனை வாசித்துக்கொள்ளுங்கள். இப்பதிவு, சட்டபூர்வமாக பயன்படுத்தும் வகையில், அதுவும் இலவசமாக எப்படி காப்புரிமை பெறுவது என்பது பற்றியது.

சட்டபூர்வமான முறையில் காப்புரிமை பெறுவதற்கு நீங்கள் www.copyright.gov என்ற தளத்திற்க்கு சென்று $35.00ஐ கட்டணமாக கட்டுவதன் மூலம் இலத்திரனியல் ரீதியிலான முறையில் காப்புரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறு ஒரு தொகை செலுத்தி காப்புரிமை பெறும் வசதி இல்லை. அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தளம்தான்
 MyFreeCopyright.com  இதன் மூலம் வழங்கப்படும் காப்புரிமை உத்தியோகபூர்வமானது அல்ல. ஆனால் அதனை உங்களது சட்டபூர்வமான தேவைகளுக்கு எந்த ஒரு தடையுமின்றி பயன்படுத்திகொள்ளலாம். நீங்கள் பிரசுரித்த ஆக்கம் அசலானது என்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு தேவையானது பிரசுரித்த திகதி. அத்துடன் "என்னுடைய ஆக்கம்தான் உறுதியானது" என்று நீங்களாகவே சொல்லமுடியாது. அப்படி சொல்வது, நீதிமன்ற கூண்டில் நிற்கும் நிரபராதி, எந்த ஒரு சாட்சியுமின்றி "நான் குற்றவாளி இல்லை" என்று கத்துவது போலானதாகும். உங்களை உண்மையானவர் என்று நிரூபிக்க ஒரு மூன்றாவது நபரின் சாட்சி நிச்சயம் அவசியம். இதேபோல், உங்களது ஆக்கம்தான் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு மூன்றாவது நபர் தான் MyFreeCopyright.com.

MyFreeCopyright.comஇல் காப்புரிமை பெறுவது எப்படி?

முதலில் இத் தளத்தில் ஒரு உறுப்பினராக உங்களைப் பதிவுசெய்துகொள்ளவேண்டும். அவ்வாறு பதிவு செய்த பின்னர் "PROTECT MY CREATION" என்பதை அழுத்தவும். 
 பின்னர், "BLOG/PODCAST" என்பதை தெரிவு செய்யவும்.  இத்தளத்தில் வலைப்பூ தவிர படங்கள், கவிதைகள், e-book மற்றும் ஒலி, ஒளி சார்ந்த படைப்புகளுக்கும் பதிப்புரிமை பெற்றுக்கொள்ளலாம். 
அடுத்ததாக தோன்றும் திரையில் உங்களது வலைப்பூவின் Feed urlஐ கொடுக்கவும். வலைப்பூ ஒன்றின் பொதுவான Feed Url வடிவம்: http://blogname.blogspot.com/feeds/posts/defaul  இறுதியாக அவர்கள் தரும் HTML  நிரற்தொடரை (code) உங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ளவேண்டும்.


MyFreeCopyright.com எவ்வாறு தொழிற்படுகின்றது?

பதிப்புரிமை செய்யப்பட்ட உங்களது இணையத் தள முகவரி பின்வருமாறு தோற்றமளிக்கும. (
copyright - இது பொதுவான ஒன்று.

Registered - இது நீங்கள் உங்களது வலைப்பூவை பதிவு செய்த நேரத்தை குறிக்கின்றது. நீங்கள் ஒரு ஆக்கத்தை பிரசுரித்த பின்னர், முடிந்தளவு விரைவாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

Fingerprint - உங்கள் வலைப்பூ காப்புரிமை செய்யப்பட்டதற்கு மிக மிக முக்கிய சான்றாக எண்ணியல் (Digital) முறையில் வழங்கப்படும் இலக்கத் தொடர். இது தனித்துவமானது. (A digital fingerprint, also know as a digest, is a hash value created by a hash algorithm. The 256-bit Secure Hash Algorithm is used by MyFreeCopyright.com and is an industry standard way of creating a fingerprint of a file. The algorithm mixes and chops the data of a file to create a unique string of numbers and letters based on the files makeup.)

Title - காப்புரிமம் செய்யப்பட்ட ஆக்கத்தின் தலைப்பு

Entry - காப்புரிமம் செய்யப்பட்ட ஆக்கத்தின் முழு வடிவம். (Complete Textual View)

MCN (My Copyright Number) - MyFreeCopyright.com இல் காப்புரிமை செய்யப்பட்டதற்க்கு சான்றாக வழங்கப்படும் இலக்கம். (The MCN is a unique number that is assigned to all Copyrights Registered with MyFreeCopyright.com. This number will not change and will always be assigned to your copyright. The MCN gives you a quick lookup and historical proof of your Copyright registration. With the MCN you can easily and conveniently prove you are Registered & Protected. )

விஷேட அம்சம்

ஒரு தளத்தை காப்புரிமை செய்த மறு வினாடி அதனுடைய பிரதி MyFreecopyright.com இனால் உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். அந்த மின்னஞ்சல் உங்களுக்கு இன்னுமொரு சாட்சியாக தொழிற்படும். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட திகதி  = காப்புரிமை செய்த திகதி. அதிலுள்ள எண்ணியல் கை ரேகை  = ஆக்கத்தின் காப்புரிமை சான்று. காப்புரிமை பிரதி வந்தடைந்த மின்னஞ்சல் = உங்களது மின்னஞ்சல் = ஆக்கம் / கட்டுரை உங்களுடையது என்பதை  மீளுறுதிப்படுதுகின்றது. 

இதனை சட்டபூர்வமான தேவைகளுக்கு பயன்படுத்தலாமா?

நிச்சயமாகப் பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக உங்களது கட்டுரையின் போலிப் பிரதி பற்றி DMCAக்கு முறைபாடுகளை அனுப்பும் பொது இதனை ஒரு சாட்சியாக பயன்படுத்தலாம். DMCA என்பது Digital Millenium Copyright Act என்பதாகும். இது எண்ணியல் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்கங்களின் காப்புரிமை தொடர்பான ஒரு சட்டம். உங்களது ஆக்கத்தின் போலிப்பிரதி பற்றிய சகல முறைபாடுகளையும் நீங்கள் இத்தளத்துக்கு அனுப்பிவைக்கலாம். அதற்குரிய விண்ணப்பப்படிவம் கூகிள் முதற்கொண்டு இணையதள சேவை வழங்கும் (Domain, Hosting, Server, Internet Advertisement, etc) எந்த ஒரு நிறுவனத்திடமும் உங்களது ஆக்கம் தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய முற்படும் பொழுது பெற்றுக்கொள்ளலாம்.
 உங்களது காப்புரிமையை மேலும் உறுதிப்படுத்த விரும்பினால் DMCA இல் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். உங்களது வலைத்தளம் DMCA இன் உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்த அந் நிறுவனத்தால் வழங்கப்படும் இலச்சினையை(Logo) உங்கள் தளத்தில் நிறுவ வேண்டும். DMCA பற்றி வேறு ஒரு பதிவில் விளக்கமாக கூறுகின்றேன் ♥

Piracy Software ஏன்? எதற்கு? எப்படி?

'எதுக்கு சார் பத்தாயிரம் 20 ஆயிரம்னு காச கரியாக்குறீங்க...என்ன வேணும்னு சொல்லுங்க, அதையே 100 ரூபாய்க்கு தர்றோம். ஒரிஜனல விட சூப்பரா இருக்கும். 2 க்கு மேல வாங்குனீங்கன்னா எக்ஸ்ட்ரா ஓண்ணு ஃப்ரீயா தர்றோம்...ரேட் பாத்து பண்ணிக்கலாம் சார்' இது வெளிநாட்டு பொருட்களின் போலிகளை வாங்க முற்படுவோரிடம் விற்பனையாளர் பேசும் டயலாக் இல்லை... சில ஆயிரங்கள் முதல் பல்லாயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சாஃப்ட்வேர்களின் பைரஸி எனப்படும் போலிகளை விற்பனை செய்யும் விற்பனையாளரின் வியாபாரப் பேச்சு. 

வீட்டுக்குள் அல்லது சிறிய அளவில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆபரேடிங் சிஸ்டம்களில் 90 சதவீதம் போலியானவை. மிகுந்த சிரத்தையுடன் பல மாதங்கள் ஆய்வுசெய்து வடிவமைக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டம்கள் மற்றும் சாஃப்ட்வேர்களைக் காட்டிலும், அவற்றின் பைரஸிகளுக்கு மவுசு அதிகமாக இருப்பது ஏன்? அசல் மென்பொருள்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றின் போலிகளின் விற்பனை அதிகரிக்கக் காரணம் என்ன? இதற்கான காரணத்தை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பார்வையில் அலசாமல், சாதாரண பயனாளர் ஒருவரின் பார்வையிலிருந்து பார்த்தால், பைரஸிகளுக்கான சரியான காரணம் புரிந்து விடும்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மட்டுமல்ல...ஆடி மாதத்தில் கூட தள்ளுபடி என்ற பெயரில் டி.வி, உள்பட அனைத்து எலெக்ட்ராணிக்ஸ் மட்டுமின்றி குண்டூசிகளின் விற்பனையும் களைகட்டும். தங்களது தயாரிப்புகளை இந்தந்த இடங்களில், இந்தந்த விலைகளில் வாங்கலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கண்காட்சிகள் மூலமும், பெரிய கடைகளில் காட்சிப்பொருளாக்கியும் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் , டி.வி, பெட்டிக்கு சமமாக அனைத்து வீடுகளையும், அலுவலகங்களையும் அலங் கரித்துவரும் கம்ப்யூட்டர்களுக்கு முதுகெலும் பாக செயல்படும் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கிய சாஃப்ட்வேர் தொகுப்புகள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் அவற்றின் விலை என்னவென்று சாதாரண பயனாளருக்கு துல்லியமாக, விரிவாக கூற எவரும் முன்வருவதில்லை. பைரஸி சாஃப்ட்வேர்கள் வைத்திருப்பது தண்டனைக்குரியது என கூறிக்கொள்ளும் மைக்ரோசாஃப்ட் உள்பட பெரிய நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றி இதுவது பொதுமக்களுக்கு புரியவைத்து (மற்ற எலெக்ட்ராணிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செய்வது போல) அசல் மென்பொருள்கள் பற்றிய தெளிவை இதுவரை ஏற்படுத்த, ஏனோ தயக்கம் காட்டுகின்றன. அட்டகாச தள்ளுபடிகள், அதிரடி சலுகைகள் என கவர்ச்சி விளம்பரங்கள் அளிக்காமல், 'இந்த தயாரிப்புக்கான விலை இது...இதை வாங்கினால் இதுபோன்ற பயன்களைப் பெறலாம்' என விளம்பரங்களை (அவுட்லுக், வீக் போன்ற மேல்தட்டு பத்திரிகைகளில் அல்ல) பொதுமக்களுக்கு புரியும் படி பத்திரிகைகளில் விரிவாக அளிக்கலாம். ஆனால் அதைச் செய்ய நிறுவனங்களால் முடிவதில்லை. அசல் மென்பொருள்களை அலைந்து திரியாமல் எங்கு வாங்குவது, அவற்றின் விலைப்பட்டியல் மற்றும் என் னென்ன பயன்கள் என்பதை விளக்க யாரும் இல்லாததால் பயனாளர்கள் வேறு பாதை தெரி யாமல் பைரஸியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

அசல் மென்பொருள் மற்றும் ஆபரேடிங்சிஸ்டம் தான் பயன்படுத்துவேன் என அடம்பிடிக்கும் பயனாளர்களிடம் கம்ப்யூட்டர் டீலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறும் அறிவுரை தான் இக்கட்டுரையின் முதல் பாராவில் நீங்கள் படித்தது... அடுத்து, அதன் விலை.... அசெம்பிள் செய்யப்படும் கம்ப்யூட்டரின் விலைக்கும், நிறுவன தயாரிப்பு கம்ப்யூட்டர்களுக்கும் அதிக விலை வித்தியாசமில்லை. தற்போதுள்ள சூழலில் தரமான கம்ப்யூட்டர்கள் கூட 30 ஆயிரத்து சொச்சத்தில் கிடைத்து விடுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று அல்லது இரண்டு அசல் சாஃப்ட்வேர்களை உள்ளிட வேண்டுமெனில், கம்ப்யூட்டர்களின் மொத்த விலைக்கு இணையாக பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டமின் விலை சற்று குறைவாக இருந்தாலும், மற்ற சாஃப்ட்வேர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் பக்கம் செல்வதற்கு, சிறிய நிறுவனங்கள் மற்றும் சாதாரண பயனாளர்கள் அச்சம் கொள்கின்றனர். இதை சாதகமாக்கிக்கொண்டு, அசெம்பிள் கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர்கள் சர்வ சாதார ணமாக பைரஸி சாஃப்ட்வேர்களை தயாரித்து சகட்டுமேனிக்கு விற்றுத் தள்ளுகின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், தடுக்க வழிகள் தெரிந்திருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் நிறுவனங்கள் பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கை. 

வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒரு சிலர் பைரஸி சாஃப்ட்வேர் வாங்குவதால், தங்கள் தயாரிப்புக்கு எந்த பாதிப்பு வராது என்றும், அசல் மென்பொருள்கள் வாங்குவதில் உறுதியாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிப் பயனாளர்கள் இருக்கும் வரை தங்களுக்கு கவலையில்லை என்றும், நிறுவனங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன.பைரஸி பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பயனாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் கூட, அசல் மென்பொருள்களின் உரிம சிக்கல்கள் மற்றும் துரிதமற்ற சேவை ஆகியவற்றால் வெறுத்துப் போய் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முழு சுதந்திரம் அளிக்கும் ஓப்பன் சோர்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்த முனைகின்றனர். இனியும் , கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விற்பனையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால்... அசல் மென்பொருள்கள் என்பது வெறும் மாஸ்டர் காப்பியாக மாறி, பைரஸி சாஃப்ட்வேர்கள் தான் அசலானவை என்ற நிலை உருவாகிவிடும்!

தேடு பொறி (Search Engine) பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டியவை

நம் கம்ப்யூட்டருக்குள் மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு. ஆனால் சர்ச் இஞ்சின்களில் நாம் தகவல்களைத் தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடும் வாய்ப்பு உள்ளதே” இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்கக் கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது. அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம் திருடாது என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது. இருப்பினும் நாம் தகவல்களைத் தேடுகையில் பின்னணியில் என்ன நடை பெறுகிறது என்று யாருக்குத் தெரியும். எனவே ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நாம் ஓரளவிற்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இயங்கலாமே. அத்தகைய நடவடிக்கைகள் குறித்து இங்கு காணலாம்.

முதலிலிருந்து இங்கு பார்ப்போம். ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு சர்ச் இஞ்சினைப் பயன்படுத்துகையில் (யாஹூ, கூகுள் போன்றவை) நீங்கள் தேடுதலுக்குப் பயன்படுத்தும் அனைத்து சொற்களையும் அவை டேட்டாவாக ஸ்டோர் செய்கின்றன. அத்துடன் நாம் செல்லும் அனைத்து தளங்களையும் தகவல்களாகப் பதிவு செய்து கொள்கின்றன. நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் இவற்றைத் தேடுகிறோம் என்ற தகவல்களையும் எடுத்துக் கொள்கின்றன. ஏன், நம் ஐ.பி. முகவரியைக் கூட இவை பதிந்து வைத்துக் கொள்கின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்தே இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள், இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம், நம் விருப்பங்கள், வெறுப்புகள் ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதைப் போல்தான். ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.

1. சர்ச் இஞ்சினில் லாக் இன்,கூடுதல் வசதிகள் வேண்டாம்:
 
எந்த சர்ச் இஞ்சினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம். அவ்வாறு உங்கள் அடையாளத்தைக் கொண்டு உள்ளே நுழைந்தால் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கே செல்கின்றன. இதனை எப்படித் தவிர்க்கலாம்? சர்ச் இஞ்சின் தரும் கூடுதல் வசதிகள் எதனையும் பெறாதீர்கள். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் சர்ச் இஞ்சினை வேறு எந்த தொடர்பும் இன்றிப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல் எதுவும் செல்லாது. ஆனால் அதன் கூகுள் டாக், ஜிமெயில், கூகுள் குரூப் போன்றவற்றைப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அதனிடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். எனவே சர்ச் இஞ்சினில் தேடும் முன் இத்தகைய வசதி தரும் அனைத்து புரோகிராம்களிலிருந்தும் லாக் அவுட் செய்து விடுபட்டு வெளியே வரவும். இதனை அனைத்து சர்ச் இஞ்சின்களிலும் மேற்கொள்ள வேண்டும்.

2. கூகுளைவிட்டு விலகிச் செல்லுங்கள்:
 
நம்மில் பலர் கூகுள் சர்ச் இஞ்சினைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் ஆபத்து உள்ளது என்று பலருக்குத் தெரியாது. கூகுள் சற்று வித்தியாசமாகத்தான் தன் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நம் தேடுதல் வேலையின் போது குக்கிகளைப் பயன்படுத்தி நம்மை அறிந்து கொள்கிறது. குக்கிகளை அழித்துவிட்டால் இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று எண்ணுகிறோம். அனைத்து குக்கிகளையும் அழிப்பது நமக்கு சில வசதிகள் கிடைக்காமல் செய்துவிடும். எனவே கூகுள் ஏற்படுத்தும் குக்கிகளை மட்டும் நீக்கிவிடலாம் அல்லது தடுத்துவிடலாம்.

இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options செல்லவும். இதில் Privacy என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Sites என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து Address of the Website என்ற கட்டத்தில் கூகுள் தளத்தின் முகவரியினை (www.google.com) டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன் Block என்ற பட்டனில் கிளிக் செய்து முடிக்கவும்.

பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools தேர்ந்தெடுத்து Options செல்லவும். இங்கும் Privacy டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Exceptions என்பதில் கிளிக் செய்து அதில் கூகுள் தளத்தின் முகவரியினை டைப் செய்திடவும். முடித்தவுடன் Block என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.

மேலே கூறிய செட்டிங்ஸ் முடித்துவிட் டால் கூகுள் தளத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கிகளைப் பதிய முடியாது. இதனால் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேர்க்க முடியாது.

3. உங்கள் ஐ.பி. முகவரியை மாற்றவும்:  
சர்ச் இஞ்சின்கள் உங்களைப் பற்றிய தகவல் களைப் பெரும்பாலும் உங்கள் ஐ.பி. முகவரியினைக் கொண்டே பெறுகின்றன. எனவே உங்கள் ஐ.பி. முகவரியை அடிக்கடி மாற்றுங்கள். நீங்கள் கேபிள் அல்லது டி. எஸ்.எல். மோடம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் ஐ.பி. முகவரியை மாற்றுவது மிகவும் எளிது. உங்கள் மோடத்தினை சற்று நேரம் ஆப் செய்திடவும். சில நிமிடங் கள் கழித்து மீண்டும் ஆன் செய்து பயன்படுத்தவும். இதனால் உங்கள் பழைய ஐ.பி. முகவரி முற்றிலுமாக நீக்கப்பட்டு புதிய ஐ.பி. முகவரி உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் டயல் அப் வகை கனெக்ஷன் வைத்திருந் தால் உங்களுக்கு இன்டர்நெட் வசதி வழங் கும் நிறுவனத்திடம் உங்கள் ஐ.பி. முகவரி அடிக்கடி மாற்றப்பட்டு வழங்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால் மாற்றிப் பெறும் வழியை அவர்களிடமே கேட்டுப் பெறவும்.

4. தேடுதலில் பெர்சனல் தகவல்கள் வேண்டாமே:  
தேடுதலில் உங்கள் பெயர், முகவரி,ஊர் போன்ற தகவல்கள் இருக்க வேண்டாம். சிலர் வேடிக்கைக்காக தங்களின் பெயர்கள், இமெயில் முகவரிகள், முகவரி, ஊர் பெயர், கிரெடிட் கார்டு எண் போன்றவற்றை இணைத்து தேடுவார்கள்.

இது வேடிக்கைக்காக என்றாலும் இதன் மூலம் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை ஊர் அறிய அனுப்புகிறீர்கள் என்பது உறுதி. உங்கள் அடையாளங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகளை நீங்களே வழங்குகிறீர்கள் என்பதுதான் இங்கு உறுதியாகிறது. உங்களைப் பற்றிய தகவல்கள் தவறானவர்களின் கைகளில் சிக்க வாய்ப்புகள் ஏற்படுகிறது.

5. பிற கம்ப்யூட்டர்களில் பெர்சனல் தேடுதல்கள்:
 
உங்களைப் பற்றிய தகவல்களுடன் நீங்கள் கட்டாயமாகத் தேடுதலை மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீடுகளில் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வகைத் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டாம். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு என்ன கிடைக்கப் போகிறது என்று எண்ணலாம். உங்கள் வீடு அல்லது அலுவலகக் கம்ப்யூட்டரில் நீங்கள் தேடுதலை நடத்தியகையோடு வேறு புரோகிராம்களிலும் லாக் இன் செய்திடலாம். இதனால் தகவல்கள் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத பிற இடத்தில் உள்ள கம்ப்யூட்டர் என்றால் வேறு புரோகிராம்களில் லான் இன் செய்வதனை நீங்கள் மேற்கொள்ளமாட்டீர்கள்.

6. உங்கள் ஐ.எஸ்.பி. தரும் சர்ச் இஞ்சின் வேண்டாம்:
இறுதியாக ஒரு ஆலோசனை. உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனம் ஏதேனும் சர்ச் இஞ்சின் வசதியைத் தந்தால் அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏற்கனவே உங்கள் ஐ.பி. முகவரி இருப்பதால் உங்களைப் பற்றிய அடிப்படை பெர்சனல் தகவல்களை அவர்கள் எளிதாகப் பெறலாம். அவர்கள் தரும் சர்ச் இஞ்சினைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சில கூடுதல் தகவல்களை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்கள். இதனைத் தவிர்க்கலாமே. உங்களுக்கு சர்வீஸ் வழங்கும் நிறுவனத்தை நம்பாமால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். இருப்பினும் உங்கள் பாதுகாப்பு முக்கியம் அல்லவா.

மேலே சொன்ன அனைத்தையும் நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. படித்து இவற்றை மேற்கொண்டால் பயன் இருக்கும், பாதுகாப்பு கிடைக்கும் என உணர்ந்தால் மேற்கொள்ளுங்கள்.

Googleஐ வீழ்த்துமா Facebook?

பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட தயாராகி உள்ள பேஸ்புக் மற்றொரு வ‌கையிலும் கூகுலுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ள‌து.அதாவது பேஸ்புக் தனது பயனாளிகளை பேஸ்புக்கை அவர்களின் முகப்பு பக்கமாக வைத்து கொள்ள கோரி வருகிறது.இதற்காக பிரத்யேக பட்டன் ஒன்றையும் அறிமுகம்செய்துள்ளது. 


தற்போது பெரும்பாலானோர் கூகுலையே முகப்பு பக்கமாக வைத்துள்ள‌னர்.அல்லது பலரும் முதலில் விஜயம் செய்யும் பக்கம் கூகுலாகவே இருக்கிற‌து.கூகுலின் சிற‌ப்பான தேடல் சேவையே இதற்கு காரண‌ம்.ஆனால் பேஸ்புக் இத‌னை மாற்ற‌ விரும்புகிற‌து. பேஸ்புக்கிலும் தேடல் வசதி உண்டு.அதோடு சமூக வலைப்பின்னல் சார்ந்த தேடலே எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கின்ற‌னர்.எனவே இணையத்தின் சக்தி வாய்ந்த தளம் என்னும் பெருமையை கூகுலிடம் இருந்து தட்டிப்பறிக்க பேஸ்புக் காய்களை நக‌ர்த்துகிறது.

Blu - Ray குறுந்தகடு ஒரு பார்வை

ணினிகளில் டேட்டாவைப் பதிய வென ப்லொப்பி டிஸ்க், சீடி, டீவிடி, பென் ட்ரைவ் எனப் பல ஊடகங்கள் (Removable Media) உள்ளன.

ஒளிக்கதிர் கொண்டு தகவல் பதியும் ஊடகங்களான சீடி, டீவிடி தொழில் நுட்பத்தையடுத்து தற்போது அறிமுகமாகியுள்ளதே பீடி (BD) எனும் ப்ளூ-ரே டிஸ்க் (Blu-ray Disc) ஆகும். இது வரை பிரபலாமாகியிருந்த டீவிடியின் இடத்தைக் கைப்பற்ற ஆரம்பித்திருக்கிறது இந்த ப்ளூ-ரே டிஸ்க். ப்ளூ-ரே டிஸ்க் உயர் தரத்திலான வீடியோ மற்றும் ஆடியோவைப் பதிய மட்டுமன்றி சீடி,டீவிடிக்களை விட பன்மடங்கு (25 GB per single layered, and 50 GB per dual layered disc) டேட்டாவையும் பதியக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

(High Definition ) ஹை டெபினிசன் எனும் உயர் தரத்திலான வீடியோ காட்சியைப் பதியக் கூடியவறு இந்த ப்ளூ-ரே டிஸ்க் உருவாக்கப் பட்டுள்ளது, ஹை டெபினிசன் எனும் உயர் தரத்திலான ஒரு திரைப்படத்தை ஒரே டீவிடியில் பதிய முடியாது. அதற்கு டீவிடியை விடவும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு சேமிக்கும் ஊடகம் அவசியம். அதற்குத் தீர்வாக வந்ததே இந்த ப்ளூ-ரே டிஸ்க்.

ஹை டெபினிசன் எனும் அதி உயர் தரத்திலான வீடியோ மற்றும் ஆடியோவைப் பதியவும் (Write), மீளப்பதிதல் (Re-write), படித்தல் (Read) போன்ற செயற்பாட்டுக்கு, அதிக கொள்ளளவுடைய ஒரு ஊடகத்தை உருவாக்கும் நோக்கில் உலகின் இலத்திரனியல் சாதனங்களை தாயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Blu-ray Disc Association (BDA) எனும் அமைப்பைத் தோற்றுவித்து ப்ளூ-ரே போமட்டை உருவாக்கின.

ஒரு லேயர் கொண்ட ஒரு பக்கத்தில் மட்டும் பதியக் கூடிய ஒரு ப்ளூ-ரே டிஸ்கில் 25 ஜிகாபைட் டேட்டாவை பதிய முடியும். இது சாதாரண ஒரு சீடி கொள்ளும் டேட்டாவை விட சுமார் 40 மடங்கு அதிகமானது. அத்தோடு இரட்டை லேயர் கொண்ட ப்ளூ-ரே டிஸ்கில் 50 ஜிகாபைட் அளவில் டேட்டாவைப் பதியலாம்.

ஹை டெபினிசன் போமட்டில் இரட்டை லேயர் கொண்ட பீடியில் 9 மணி நேரம் ஓடக் கூடிய வீடியோவையும்., சாதாரண (standard) போமட்டில் பதிவதானால் சுமார் 23 மணி நேரம் ஓடக் கூடிய வீடியோ படங்களையும் பதிந்து விடலாம்.

உருவத்தில் சீடி மற்றும் டீவிடிக்களின் அளவினை ஒத்ததாகவே ப்ளூ-ரே டிஸ்கும் காணப்படுகின்றது. அது மட்டுமன்றி கையாளப்பபடும் தொழில் நுட்பமும் ஒத்ததாகவே உள்ளது. சீடி மற்றும் டீவிடியை விட ப்ளூ-ரே டீஸ்கில் காணப்படும் அடிப்படை வேறுபாடுயாதெனில் அதில் டேட்டாவை பதியவும் படிக்கவும் பயன் படுத்தப்படும் லேசர் கதிராகும். சீடி, டீவிடி என்பவற்றில் சிவப்பு நிறத்திலான லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படும் அதேவேளை ப்ளூ-ரே டிஸ்கில் நீல நிற லேசர் கதிர்கள் பயன் படுத்தப்படுகின்றன. நீல் நிற லேசர் கதிர்கள் குறுகிய அலை (wavelength) நீளத்தைக் கொண்டவை. (450 Nanometer) சிவப்பு நிற லேசர் கதிர்கள் 650 நெனோ மீட்டர் அலை நீளம் கொண்டவை.. நீல நிற லேசர் கதிர்களால் சிறு பரப்பிலும் ஊடுறுவ முடியும். . இதன் காரணமாகவே அவற்றில் அதிக டேட்டாவை பதிய முடிகிறது.

நீல நிறக் லேசர் கதிர்கள் பயன்படுத்துவதனாலேயே ப்ளூ-ரே டிஸ்க் எனும் பெயரை இடந்த டிஸ்க் பெறுகிறது. அதாவது ப்ளூ (blue-நீலம்) என்பது பயன்படுத்தப்படும் லேசர் கதிரின் நிறத்தையும் ரே (ray) என்பது ஒளிக் கதிர் என்பதையும் குறித்து நிற்கிறது. எனினும் இங்கு blue எனும் வார்த்தையிலுள்ள "e" எழுத்து கை விடப்பட்டுள்ளது.

டொஸீபா நிறுவனமும் ஹை டெபினிசன் வீடியா பதிவுக்கென HD-DVD எனும் டிஸ்கை ப்ளூ-ரே டிஸ்கிற்குப் போட்டியாக அறிமுகப்படுத்தியது. எனினும் ப்ளூ-ரே டிஸ்கின் கொள்ளளவை விட குறைந்ததாகவே அவை காணப்பட்டன. என்வே டொஸீபா நிறுவனம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதோடு HD-DVD யை தயாரிப்பதையும் நிறுத்திக் கொண்டது.

இந்த ப்ளூ-ரே டிஸ்கை வழமையான சீடி அல்லது டீவிடி ப்லேயர் மூலம் இயக்க முடியாது. இதனை ப்ளூ-ரே டிஸ்க் ப்லேயர் கொண்டு மட்டுமே இயக்கலாம். எனினும் ப்ளூ-ரே டிஸ்க் ப்லேயர் கொண்டு சீடி மற்றும் டீவிடிக்களை இயக்க முடியும். இதனை ஆங்கிலத்தில் (Backward Compatibility) எனப்படுகிறது.

தற்போது சீடி ரொம், டீவிடி ரொம்மிற்குப் பதிலாக கணினிகளில் இந்த ப்ளூ-ரே டிஸ்க் ரொம் இணைந்து வர ஆரம்பித்துள்ளது. சீடி, டீவிடி போன்றே பீடியிலும் BD -R, BD-RE, BD-ROM என மூன்று வகைகளுள்ளன. இவற்றில் ஹை டெபினிசன் வீடியா மட்டு மன்றி டேட்டாவையும் பதியலாம். கணிணியில் ப்ளூ-ரே டிஸ்குடன் ஒத்திசையக் கூடிய மென்பொருள்களாக Roxio- Easy Media Creator, Click to Disc, InterVideo WinDVD-BD என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்த தலை முறையினர் சீடி, டீவிடிக்குப் பதிலாக இந்த ப்ளூ-ரே டிஸ்கையே பயன்படுத்தப் போகின்றனர். இந்த ப்ளூ-ரே டிஸ்குடன் தொழில் நுட்ப வளர்ச்சி நின்று போகுமா? இல்லவேயில்லை. புற ஊதாக் கதிர் (Ultra Violet Rays) கொண்டு பதியக் கூடிய 500 ஜிபீ கொள்ளளவுடைய டிஸ்கைத் தயாரிக்கும் முயற்சியில் பயனியர் எனும் நிறுவனம் இப்போதே முயன்று வருகிறது

90 கோடி கணிணிகளுக்கு ஆபத்து - மைக்ரோ சாஃப்ட் !

உலகம் முழுதுமுள்ள கணிணிகளில் இன்டர்நெட் எக்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணிணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இன்டர்நெட் எக்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணிணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP (SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008 (R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் நெருப்பு நரி (ஃபையர் ஃபாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சஃபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வின்டோஸ் இயங்குதளத்திற்குள்ளேயே இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Premium Blogger Templates | Best View (1024x768) on Mozilla Firefox and IE 7.0