இறந்த பிறகும் (???) இமெயில் அனுப்பலாம் - அட இது சத்தியமுங்கோ

என்ன இது? இறந்த பிறகு யார் அனுப்புவார்கள்? முதலில் எப்படி கடிதம் எழுத முடியும்? யாருடைய இமெயில் அக்கவுண்ட்? என்ற சந்தேகமும், சிரிப்பும், ஒரு வேளை முடியுமோ என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் எழுகிறதா? ஆம் முடியும். இணையத்தில் எதுவும் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. நீங்கள் இறந்த பிறகு நீங்கள் முன்பே தயார் செய்து வைத்த இமெயில் கடிதங்கள் உடனே துப்பாக்கி முனையில் இருந்து கிளம்பும் தோட்டாக்கள் போல நீங்கள் யாருக்கு எழுதினீர்களோ அவர்களுக்குச் செல்லும். இந்த தளத்தினை http://www.farawayfish.com என்ற முகவரியில் காணலாம். முதலில் இதற்கான கட்டாயம் அல்லது சூழ்நிலை என்ன என்று பார்ப்போம்.

நாம் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். அதுவும் எதிர்பாராத தருணத்தில். பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பல விஷயங்களை நம் மனதில் வைத்திருப்போம். பேங்க் அக்கவுண்ட், லாக்கரில் இருக்கும் பணம், டாகுமெண்ட் மற்றும் நகை, பணம் கொடுத்து இன்னும் பதியாமல் இருக்கும் நிலம் மற்றும் வீடு, யாரை எல்லாம் நம்பக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுரை, யாரை அவர்கள் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற இவை எல்லாம் உயிருடன் இருக்கையில் கொட்டித் தீர்த்துவிட முடியாது. ஆனால் திடீரென மரணம் சம்பவித்தால் என்ன செய்திட முடியும்? உயில் எழுதினால் தெரிந்துவிடாதா? யாரையாவது நம்பி எழுதி வைத்து இறந்தால் அவர் நம்பிக்கை மோசம் செய்துவிடமாட்டாரா? இந்த பதட்டத்திற்குத்தான் நமக்கு உதவிட வந்துள்ளது மேலே சொன்ன முகவரியில் உள்ள தளம். இந்த தளத்திற்குச் சென்றால் நம்மைக் கவரும் ஓர் இடம் – நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள், மாதங்கள் உயிர் வாழ்வீர்கள் என்று ஒரு கணக்குப் போட்டு சொல்லும் இடம் தான். உங்கள் பெயர், வயது, ஆண் மற்றும் பெண் போன்ற விபரங்களைக் கேட்ட பின் நீங்கள் புகை பிடிக்கிறீர்களா? மது குடிக்கிறீர்களா? உங்கள் எடை மற்றும் உயரம் என்ன என்று கேட்டு இத்தனை ஆண்டுகள் நீங்கள் உயிர் வாழலாம் என்று ஹேஷ்யமாக ஒரு கணக்கிட்டுச் சொல்கிறது. ஆண்டுக் கணக்கை அடுத்து அதனை எத்தனை நொடிகள் என்றும் ஒரு கடிகாரக் கணக்கு மாதிரி காட்டுகிறது. இதில் நம் மரணத்திற்கு விதித்த காலம் நொடிகளில் குறைவதைக் காண மனதிற்குப் பக் என்கிறது.
சரி, முக்கிய விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் பதிந்து கொண்டால் உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அதனைக் கிளிக் செய்தால் இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது. இதில் உங்களின் எண்ணங்களைப் பதிந்து வைக்கலாம். உங்கள் கொள்கைகளை எழுதி வைக்கலாம். அவை நீங்கள் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு அறிவிக்கும் வகையில் ஓர் இணைய தளமாகக் கிடைக்கும். பத்து ஆண்டுகளுக்கு இவை இணைய வெளியில் இருக்கும்.

அடுத்ததாக நீங்கள் யாருக்கெல்லாம் உங்கள் செய்தியை, எண்ணங்களை, அறிவுரையை, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அறிவுறுத்த வேண்டுமோ அவர்களின் இமெயிலுக்கு அதனை செய்தியாக கடிதம் எழுதி வைக்கலாம். இவை உங்களுக்கென ஒதுக்கப்பட்ட தளத்தில் பாதுகாக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மட்டும் இதனை எடிட் செய்து மாற்றலாம்; புதிய செய்திகளை தகவல்களை இணைக்கலாம். இத்தனை மெயில்களை இதுவரை நீங்கள் சேமித்து வைத்துள்ளீர்கள் என்று விவரங்கள் உங்களுக்குக் காட்டப்படும்.

சரி, இந்த செய்திகள் நீங்கள் இறந்த பின்னர் எப்படி மற்றவர்களுக்கு அனுப்பப்படும்? முதலில் செய்திகளை அமைக்க எப்படி இடம் ஒதுக்கப்படும். இந்த தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றைப் பதிந்தால் நீங்கள் தரும் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதனைக் கிளிக் செய்தால் அந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படும். இங்கு தான் நீங்கள் எழுதும் எண்ணங்களும் தகவல்களும் மற்றும் அமைத்திடும் இமெயில் செய்திகளும் பாதுகாக்கப்படும். பாடல்களைப் பதிந்து வைக்கலாம்; வீடியோ காட்சிகளையும் இதில் பதியலாம்.
அடுத்ததாக யார் இந்த இமெயில் செய்திகளை அனுப்புவார்கள். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையான மூன்று பேர் குறித்த தகவல்களையும் இமெயில் முகவரிகளையும் அனுப்ப வேண்டும். இவர்களை இன்பார்மர்கள் என இந்த தளம் அழைக்கிறது. இவர்கள் தான் நீங்கள் இறந்தவுடன் இந்த தளத்திற்கு செய்தி அனுப்புபவர்கள். இவர்களுக்கு இந்த தளத்தை நிர்வகிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் பாஸ்வேர்ட் ஒன்றையும் பாதுகாப்பான லிங்க் ஒன்றையும் அனுப்பி வைப்பார்கள். உங்களின் உயிர் நண்பர்களாக, உறவினர்களாக இவர்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் நீங்கள் இறந்தவுடன் இவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதுதான். உடனே இந்த தளம் மூன்று பேருக்கும் தகவல் அனுப்பி நீங்கள் இறந்ததை உறுதி செய்யும். ஏன், உங்கள் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும். 12 வகையான சோதனை 18 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நீங்கள் எழுதி வைத்த தகவல்கள் அடங்கிய தளம் உலகிற்கு காட்டப்படும். நீங்கள் எழுதி வைத்த இமெயில்கள் (இலவச சேவையில் 25 பேருக்கு அனுப்பலாம்) சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். இத்தனை நிலைகள் இருந்தாலும் அனைத்துமே நாம் மேற்கொள்ளும் வகையில் எளிமையானதாக உள்ளன. இறந்த பிறகு இறவாப் புகழ் பெற இந்த தளத்தை அணுகலாம். உங்களின் இறுதி செய்திகள் உற்றவர்களுக்கு உங்களுக்குப் பின் சென்று சேர இதனைப் பயன்படுத்தலாம். இலவசமாக இதனைப் பயன்படுத்த எண்ணினால் ஓர் ஆண்டுக்கு மட்டுமே முடியும். அதாவது பதிந்து ஓர் ஆண்டில் நீங்கள் இறந்துவிட்டால் இலவசமாக செயல்படுத்தப்படும். அதற்கும் மேலான காலத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் சிறப்புகளைப் பார்ப்போம்: நீங்கள் அமைத்திடும் செய்திகள் மற்றும் இமெயில்களை உங்களைத் தவிர யாரும், இன்பார்மர்கள் உட்பட, பார்க்கவோ படிக்கவோ எடிட் செய்திட முடியாது. இறப்பதற்கு முன் தானாக இவை அனுப்பப்பட்டுவிடுமா? நிச்சயம் 100% இல்லை. பல வகையான சோதனை மேற்கொண்ட பின்னர், இறந்தது உறுதி செய்யப்பட்ட பின்னரே செய்திகள் அனுப்பப்படும். உங்கள் இன்பார்மார்கள் மூன்று பேரும் இணைந்து தவறு செய்தால் தான் பிரச்சினை ஏற்படும். அப்போதும் இந்த தளம் சில ரகசிய சோதனைகளை மேற்கொள்ளும். இன்பார்மர்களை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து தளத்திற்கு அறிவியுங்கள். இவர்களை மாற்ற வேண்டும் என இடையே எண்ணினால் மாற்றலாம். தள நிர்வாகிகள் இவர்களுடன் பேசி இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறுவார்கள்.
இலவச சேவை எனில் உங்கள் தளம் மரணத்திற்குப் பின் ஓராண்டும் கட்டண சேவை எனில் 9 ஆண்டுகளும் இருக்கும். உங்கள் நண்பர்கள் யாரேனும் தொடர்ந்து பணம் செலுத்தினால் இணையத்தில் தொடர்ந்து உங்கள் தளம் இடம் பெறும். நீங்கள் சேவ் செய்து வைத்த பைல்களின் பார்மட்டுகள் காலப்போக்கில் மாறுதல் அடைந்தால் தளம் அவற்றை அப்டேட் செய்திடும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கு ஒப்புதல் பற்றுச் சீட்டினை இந்த தளம் வழங்கிடும். எனவே பணத்திற்குப் பாதகமில்லை.

இன்பார்மர்களிடம் நான்கு முறை இமெயில் மூலம் பல வழிகளில் கேட்கப் பட்ட பின்னரே உங்கள் கடிதங்களை அனுப்ப அனுமதி வழங்கப்படும். உங்கள் இமெயிலுக்கும் பல முறை இமெயில் அனுப்பப்பட்டு மரணம் உறுதி செய்யப் படும். சற்று கூடுதலாக கட்டணம் செலுத் தினால் எஸ்.எம்.எஸ். மூலமும் மரணம் உறுதி செய்யப்படும். உங்களுடைய பாஸ்வேர்ட் மற்றும் பின் எண் மறந்து போனால் தளத்திற்கு தகவல் தெரிவித்தால் அவை அறிவிக்கப்படும்.

2 comments:

Philosophy Prabhakaran said on :

நல்ல தகவல்... நன்றி தலைவரே...

ஆர்வா said on :

பயபுள்ளைங்க எப்படியெல்லம் யோசிக்குதுங்கப்பா....

நியூட்டனின் 3ம் விதி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Premium Blogger Templates | Best View (1024x768) on Mozilla Firefox and IE 7.0